பீட்டர் அல்போன்ஸ் 
கட்டுரை

மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்!

அசோகன்

காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தியின் தலைமையில் இரண்டாவது முறையாகப் படுதோல்வி அடைந்துள்ளது குறித்து அக்கட்சியின் தமிழக மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம்.

காங்கிரஸின் தோல்வி, அதன் எதிர்காலம் பற்றி உங்கள் கருத்தைக் கூறுங்கள்?

காங்கிரஸ் கட்சியின்  அடித்தளத்தையே ஆட்டிப்பார்க்கும் இந்த தோல்வியை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை! ஒரு தேர்தல் தோல்வி மட்டுமே ஓர் இயக்கத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யும் என்று நான் நினைக்கவில்லை. அத்துடன் இதை ஒரு சராசரி தோல்வி என்றும் நான் பார்க்க இல்லை. இந்திய ஜனநாயக மதிப்பீடுகளுக்கான தோல்வி என்றே பார்க்கிறேன். பாஜகவுக்கு வாக்க்ளித்த வாக்காளர்களின் மனநிலையைப் பார்த்து நான் அதிர்ச்சியுற்றுள்ளேன். இதுவரை வலதுசாரி இந்துத்தவ தேசியம் என்பது பாஜக ஆர் எஸ் எஸ்ஸின் அரசியல் சித்தாந்தமாக மட்டுமே இருந்தது. இந்த தேர்தலுக்குப் பிறகு அது இந்திய அரசை வழி நடத்தக்கூடிய கொள்கை விளக்கமாகவும் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் அரவணைக்கிற அரசியல் நெறியாகவும் மாறி இருப்பதைப் பார்த்து என்னால் கவலை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.  ஒரு வகையில் இந்த தேர்தல் முடிவுகள் இந்திய ஜனநாயகத்தின் சர்க்கரை நோய்த்தாக்குதல் என நான் அழைப்பேன். சர்க்கரை நோய் என்பது ஒரு நோயல்ல.  உடலின் பல உறுப்புகளின் செயல்பாட்டுக்குறைவு. அதை உடனடியாக சரி செய்யவில்லை என்றால் பல உறுப்புகள் பாதிக்கப்படும். நீதித்துறை, பாராளுமன்றம், ஊடகம், தேர்தல் ஆணையம் ஆகியவை முக்கியமான உறுப்புகள். இவற்றின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது இவை செயலிழந்து வருகின்றனவோ என்ற சந்தேகம் வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தோல்வியைப் பற்றிக் கவலைப்படுவதை விட ஜனநாயகத்தின் கூறுகள்
சிதைவதை எண்ணி நாம் கவலைப்படவேண்டும். இன்று உலகமெங்கும் ஜனநாயகம் மரணப்படுக்கையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கவலை கொள்கிறார்கள். கம்யூனிஸம், சோஷலிசம் ஆகியவை தளர்ந்துபோனதுபோல் ஜனநாயகமும் தளரும் நாட்கள் வந்திருப்பதாக மேலை நாட்டு ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பெரும்பான்மை வாதம் ஜனநாயகத்தை விழுங்கி தன்னை ஜனநாயகமாகக் காட்டிக்கொள்ளும் உருமாற்றம் நடப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த வகையில் இந்திய ஜனநாயகத்துக்கும் அந்த ஆபத்து ஏற்பட்டிருக்கிறதோ என்று நான் அஞ்சுகிறேன். அந்த போக்கை தடுத்து நிறுத்தாவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகிவிடும்.

ஆனால் இதை எதிர்த்துப் போராட வேண்டிய காங்கிரஸ் தலைமை இப்போது பதவி விலகுவதாகச் சொல்கிறதே?

ராகுல்காந்தி சொல்வதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இரண்டு தேர்தல்களாக அவர் தலைமையேற்று நடத்துகிறேன். தன்னுடைய
சக்தி அனுமதிக்கும் அளவுக்கு முயன்றார். பத்தாண்டுகள் நீண்ட காலம் என்றும் தன் மனச்சாட்சிப்படி அது சரியல்ல என அவர் பதவி விலக முன் வந்துள்ளார். அவர் அளித்திருக்கும் பங்கு மகத்தானது. 140 ஆண்டுகால வரலாறு கொண்ட கட்சியின் சுமைகளை அவர் தம் தோளில் தாங்கினார்.  மூத்த கட்சியாக இருக்கும் இக்கட்சியை தன் விருப்பப்படி வழி நடத்த அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது தான் என்னுடைய கருத்து. ஆனால் நதி வறண்டுபொனால் அதற்கு நதியா பொறுப்பு ஏற்கும்? பிழை மேகம் கருக்கொள்ளும் இடத்தில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் கொள்கை நாற்றங்கால்கள் வறண்டுபோயிருக்கின்றன என்று ஒவ்வொரு காங்கிரஸ் காரரும் ஒப்புக்கொள்ளவேண்டிய நேரம் வந்திருப்பதாக நான் கருதுகிறேன். பாஜக& ஆர்.எஸ்.எஸ் பெற்ற வெற்றி என்பது தத்துவார்த்த ரீதியாக 90 ஆண்டுகள் அவர்கள் மேற்கொண்ட உழைப்பின் வெற்றி. ஒவ்வொருமுறை தோற்கும்போதும் அதை மறுபரிசீலனை செய்து முன்வைத்து வெற்றியைப் பெற்றுள்ளனர். நேரு கண்ட இந்தியா என்ற சிந்தனைகளில் இருந்து மக்கள் சிந்தனைகளை மடை மாற்றம் செய்துள்ளனர். 13 விழுக்காடு கொண்ட இஸ்லாமியரும் 2 விழுக்காடு கொண்ட கிறிஸ்துவர்களும் இந்தியாவில் உள்ள 85 விழுக்காடு இந்துக்களுடைய அரசியல் அதிகாரத்தை பறித்துள்ளனர் என்கிற பொய்ப்
பிரசாரம் கெட்டிக்காரத்தனமாக மக்களிடையே எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து வெளியே வர பதவி, அதிகாரம், சுயநலம் ஆகிய பற்றுகள் இல்லாத ஒரு பெரிய கொள்கைப் படை தயார் செய்யப்படவேண்டும். பாஜகவுக்கு இருக்கும் ஆர்.எஸ்,எஸ் போன்ற சித்தாந்த அமைப்பு பின்புலம் வேண்டும். காந்தியடிகள் அதை நினைத்துத்தான் அன்று சேவாதளத்தை உருவாக்கினார். இன்று அதுபோன்ற அமைப்பு காங்கிரசிடம் இல்லை. பல மாநிலக்கட்சிகளுக்கும் இதுதான் நிலை.

மோடிக்கு ஒரு ஷா போன்று ராகுல் காந்திக்கு யாரும் இல்லை என்று ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறதே?

இன்றைய பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் இடையே இருக்கும் பரஸ்பர நம்பிக்கை மிகப்பெரிய காரணம். மோடி நினைப்பதை அமித் ஷா செய்கிறாரா அல்லது அமித்ஷா செய்வதை மோடி நினைக்கிறாரா? என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவர்களுக்கு இடையே புரிதல் உள்ளது. அது ஒரு வெற்றியை ஈட்டித்தந்துள்ள இணைப்பு. ஆனால் அது நாடாளுமன்ற மரபாகுமா? உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நிர்வகிப்பதை  இரண்டு தனிநபர்களிடம் விட்டுவிடுவது சரியாக இருக்குமா என்று காலம்தான் முடிவு செய்யவேண்டும்.

புதிய மற்றும் இளம் திறமையாளர்களை காங்கிரஸ் ஈர்ப்பது குறைந்துவிட்டதே?

காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற தலைமைப்பதவிக்கான இடங்கள், நாடாளுமன்ற, சட்டமன்றப் பதவிகள் சுழற்சி முறையில்தான் வழங்கப்படவேண்டும். இரண்டு முறைக்கு மேல் தொடர்ச்சியாக வழங்கப்படக்கூடாது. இதை காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்காவிட்டால் அக்கட்சி வளர வாய்ப்பே இல்லை. இதை பலமுறை சொல்லி இருக்கிறேன். காங்கிரஸ் ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல. நாட்டின் ஆன்மாவை உருவாக்கி வளர்த்த இயக்கம். அது பலவீனப்படுவது நாட்டுக்கு நல்லதல்ல.  மொழி மாநிலம் சாதி மதம் ஆகியவற்றை தாண்டிய கட்சி இது. இக்கட்சி பலவீனம் அடைந்த இடங்களை வலதுசாரி இந்துத்துவ தேசியமே கைப்பற்றி உள்ளது. இடது
சாரிகள் நலிவுற்ற இடத்திலும் இதுதான் நிலை. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் தேர்தல் அரசியலில் இனி பங்கேற்பது இல்லை;  அதிகாரமிக்க பதவியில் அமர்வது இல்லை என முடிவு செய்யவேண்டும்.  தங்கள் குடும்பங்களுக்கு மட்டுமே எல்லா பதவிகளையும் வாங்கித்தரும் முனைப்பிலிருந்து அவர்கள் வெளிவர வேண்டும். இல்லை எனில் ஒரு நாளும் இனி எந்த இளைஞர்களும் காங்கிரஸ் கட்சிக்கு வரமாட்டார்கள்.

ஜூலை, 2019.